தலைப்புச் செய்திகள்

ஏர்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில், நாமல் உள்ளிட்ட நால்வர் மீது, நிரந்தர மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான பணமோசடி மற்றும் 100 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் மேலும் மூவர் மீது – கொழும்பிலுள்ள நிரந்தர மேல் நீதிமன்றத்தில் (Permanent High Court Trial-at-Bar) குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதாரகமவிடம் இது குறித்த தகவலைத் தெரிவித்தார்.

பிரதம நீதியரசரின் அனுமதியுடன், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நிரந்தர மேல் நீதிமன்றத்தில் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இந்தக் குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், 59 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கமைய, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் – இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற இறுதி சந்தர்ப்பம் இதுவாகவே இருக்கும் என்று, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதவானிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று (27) பிற்பகல் மீண்டும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.