
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில், நீதிமன்றம் விதித்த இழப்பீட்டுத் தொகையை முழுமையாகச் செலுத்தாத முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 5 பிரதிவாதிகளை, பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம், கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 5 பிரதிவாதிகளையும் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
கெஹலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டியிருந்த நிலையில், அவர் இதுவரை 20 மில்லியன் ரூபாயை மட்டுமே செலுத்தியுள்ளதாக அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறியதன் மூலம், கெஹலிய ரம்புக்வெல்லவும் ஏனைய பிரதிவாதிகளும் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாக ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை’ (TISL) அமைப்பு தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னரே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.



