தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நபரொருவருக்கு வழங்கிய ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ செல்லாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2024 செப்டம்பர் மாதம் – சிறைக்கைதி ஒருவருக்கு வழங்கிய பொதுமன்னிப்பு செல்லாது என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொதுமன்னிப்பு வழங்கியமையானது – சமத்துவம் மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு தொடர்பான அடிப்படை உரிமையை மீறுவதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, கலாநிதி சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், குறித்த நபருக்குச் சாதகமான முன்னுரிமை வழங்கப்பட்டதைக் கண்டறிந்தது.

அந்த நபருக்கான சிறைத்தண்டனை உத்தரவில், அவர் ‘அபராதம்’ செலுத்தத் தவறியதற்காகச் சிறையிலடைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேவேளையில், பராமரிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியதற்காகச் சிறையிலடைக்கப்பட்ட மற்றொரு நபருக்கு, ஒரு வார கால தண்டனை குறைப்பு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

சிறைத்தண்டனை உத்தரவுகளில் பயன்படுத்தப்பட்ட சொற்களை அடிப்படையாகக் கொண்டு காட்டப்பட்ட இந்த வேறுபாட்டிற்கு எந்தவொரு சட்டப்பூர்வமான அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், இருவருமே பராமரிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியதற்காகவே சிறையிலடைக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி, நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் அரசியலமைப்பின் 12(1) பிரிவை மீறும் வகையில் செயல்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

கொழும்பு கிழக்கு காதி நீதிமன்றத்தில் பராமரிப்பு உத்தரவைப் பெற்றிருந்த அஹமட் ஜலீல் ஃபர்மிலா பேகம் என்பவர் தாக்கல் செய்த – அடிப்படை உரிமை மனுவின் பேரிலேயே, நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. அந்த உத்தரவின்படி, மனுதாரரின் முன்னாள் கணவர் மொத்தம் 60,000 ரூபாயைப் பராமரிப்புத் தொகையாகச் செலுத்த வேண்டியிருந்தது.

அந்த உத்தரவை அவர் நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம், 1.74 மில்லியன் ரூபாய் நிலுவைப் பராமரிப்புத் தொகையை அறவிடுவதற்கான நிறைவேற்றுச் சான்றிதழை வழங்கியது. இதனைத் தொடர்ந்து, அந்த முன்னாள் கணவருக்கு 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் 2024 ஜூலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும், ‘கைதிகள் தினத்தை’ முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்குமாறு – அப்போதைய நீதி அமைச்சர் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, அவரது எஞ்சிய சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் 2024 செப்டம்பர் 12 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தத் தண்டனை குறைப்பை எதிர்த்து மனுதாரர் வழக்குத் தொடர்ந்தார். இது தன்னிச்சையான செயல் என்றும், இதன் மூலம் தனக்குக் கிடைக்க வேண்டிய பராமரிப்பு நிலுவைத் தொகையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு பறிபோய்விட்டதாகவும் அவர் வாதிட்டார்.

மேலும், பராமரிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியதற்காகச் சிறையிலடைக்கப்பட்டிருந்த மற்றுமொரு நபரான மொஹமட் ஃபைசல் மொஹமட் நவ்ஷாத் என்பவருக்கு இத்தகைய சலுகை வழங்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நேரத்தில், நவ்ஷாத் தனது 27 மாத சிறைத்தண்டனையில் சுமார் எட்டு மாதங்களைக் கழித்திருந்த போதிலும், அவருக்கு ஒரு வார கால தண்டனை குறைப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதற்கு மாறாக, மனுதாரரின் முன்னாள் கணவர், தனது 29 மாத சிறைத்தண்டனையில் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே சிறையில் இருந்த நிலையில், எஞ்சிய தண்டனை முழுமையாகக் குறைக்கப்பட்டது.