
முஹம்மது நபியை அவதூறாக எழுதிய குற்றத்துக்காக, சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சார்பாக, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள், மேல்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனோஜனின் குடும்பத்தினருக்கு, இலங்கை வெளியுறவுத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு – இந்தத் தகவலை அறிவித்துள்ளது.இது தொடர்பான ஆங்கிலக் கடிதம் ஒன்றை, அனோஜனின் தம்பி ஹம்சிதன் ஹரிஸ் (Hamsithan Harish) என்பவர் அவரின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு;’
சிவராசா அனோஜன் தொடர்பாக சவூதி அரேபிய ராச்சியத்தின் குற்றவியல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு.வெளியுறவுத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், சவூதி அரேபிய ராச்சியத்தில் (KSA) உள்ள அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் உங்கள் மகன் சிவராசா அனோஜன் தொடர்பாக வழங்கிய தீர்ப்பினை ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதை உங்கள் கவனுத்திற்குக் கொண்டுவருகிறது.
சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொண்ட தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட நகலின்படி, பொருந்தக்கூடிய சவூதி அரேபிய சட்டங்களின் கீழ், அனோஜன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
அதற்கமைய, நீதிமன்றம் பின்வரும் தண்டனையை விதித்துள்ளது:
● அவரின் ஆரம்பக் காவலில் வைக்கப்பட்ட திகதியிலிருந்து கணக்கிடப்படும் ஐந்து (05) ஆண்டுகள் சிறைத்தண்டனை.
● மூன்று மில்லியன் சவூதி ரியால்கள் அபராதம் (SAR 3,000,000).
●குற்றத்தைப் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் சாதனம் பறிமுதல் செய்யப்படுவது.
● குற்றத்துடன் தொடர்புடைய சமூக ஊடகக் கணக்கு மூடப்படுவது.
தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் நாளிலிருந்து – முப்பத்து (30) நாட்களுக்குள், இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படலாம் என்றும் நீதிமன்றம் அனைத்து தரப்பினருக்கும் மேலும் அறிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், தீர்ப்பு இறுக்கமானதாகிவிடும்.
இத்துடன் தொடர்புடைய வகையில், சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், இத்தீர்ப்பு தொடர்பாக சவூதி சட்ட ஆலோசகர் ஒருவரின் கருத்தையும் கோரியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
பெறப்பட்ட சட்டக் கருத்தின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் மேல்முறையீட்டை ஏற்கும் அல்லது தண்டனையைக் குறைக்கும் சாத்தியக்கூறு மிகக் குறைவு (extremely low) என்று கருதப்படுகிறது’.


