மேல் மாகாணத்தில் நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்: எச்சரிக்கையாக இருங்கள்
🕔
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக, மேற்கு மாகாணம் முழுவதும் உள்ள பல வைத்தியசாலை நிரம்பியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருப்பது, வைத்தியசாலைகள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதனால் நோயாளிகளுக்குப் போதுமான சிகிச்சையை வழங்குவது மிகவும் கடினமாகி வருகிறது என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கண்ணங்கர கூறியுள்ளார்.
நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், டெங்கு தொடர்பான இறப்பு எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்க சந்தர்ப்பமுள்ளது ன்று அவர் எச்சரித்தார்.
தற்போதைய நிலவரம் குறித்துக் கருத்து தெரிவித்த டொக்டர் கண்ணங்கர, நாட்டில் பதிவான 59,638 டெங்கு நோயாளிகளில் 52.4% பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகளைக் கொண்ட 22 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அதிக ஆபத்துள்ள இந்தப் பகுதிகளில் ஒரு வார கால டெங்கு சிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வார இறுதியில் திட்டத்தின் முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் அடங்கிய மும்முனைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் டொக்டர் கண்ணங்கர குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த நோய்ப் பரவல் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளதாலும், பல வைத்தியசாலைகள் முழுத் திறனில் இயங்கி, சுகாதார அமைப்பில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாலும், தற்போது அவசரகால குறுகிய காலத் தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“டெங்கு பாதிப்புகளின் தற்போதைய அதிகரிப்பு மிகவும் தீவிரமானதாகும். பல வைத்தியசாலைகள் ஏற்கனவே தங்களின் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன. பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், இறப்புகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்க சந்தர்ப்பம் உள்ளது” என்று டொக்டர் கண்ணங்கர எச்சரித்தார்.