
மக்கள் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தமது சொத்துக்களை, வங்கி ஏலம் விடும் நடவடிக்கையை எதிர்த்து, தயா குரூப் லிமிடெட் மற்றும் தயா அப்பேரல் எக்ஸ்போர்ட் (பிரைவேட்) லிமிடெட் தாக்கல் செய்த ரிட் மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொடுப்பனவை மீட்கும் நடவடிக்கையைத் தொடர்வதற்கு – வங்கிக்கு சட்டபூர்வ உரிமை உண்டு என்று நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்துள்ளது.
நீதியரசர்கள் ஆர். குருசிங்க மற்றும் டொக்டர் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், மனுதாரர்கள் ரூ. 01 மில்லியன் செலவுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
1.42 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிலுவையில் உள்ள கடனை மீட்பதற்காக, அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை – பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்கி, மக்கள் வங்கியின் பணிப்பாளர்கள் குழு நிறைவேற்றிய தீர்மானத்தைச் செல்லாததாக்க, தயா நிறுவனங்கள் ரிட் மனுக்கள் மூலம் கோரிக்கை விடுத்திருந்தன.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், கொவிட்-19 பெருந்தொற்று, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை உள்ளிட்ட தொடர்ச்சியான – முன்னெப்போதும் இல்லாத பொருளாதார பின்னடைவுகளால், தங்களுக்கு நிதிச் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அவை கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பாதித்ததாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.
மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ், வங்கி தனது இணை நிறைவேற்று அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், அதிகப்படியான மாற்று விகிதத்தைப் பயன்படுத்தி கடனைப் பெருக்கியதாகவும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டினர். கட்டாய சட்டப்பூர்வ அறிவிப்புகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், ஏல செயல்முறை நடைமுறை ரீதியாக குறைபாடுடையது என்றும் அந்த நிறுவனங்கள் வாதிட்டன.
இருப்பினும், நீதிமன்றம் அந்த வாதங்களை நிராகரித்து, மீட்பு நடவடிக்கையைத் தொடர – வங்கிக்கு சட்டபூர்வ உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.
இணை நிறைவேற்றத்திற்கு அங்கீகாரம் அளித்து, மார்ச் 26, 2021 அன்று வங்கியால் ஒரு முறையான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், மனுதாரர்கள் நிலுவையில் உள்ள கடன்களை முழுமையாகத் தீர்க்கத் தவறிவிட்டனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. செலுத்தப்படாத கடனை மீட்பதற்காக, அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களின் ஏல விற்பனையைத் தொடர மக்கள் வங்கிக்கு உரிமை உண்டு என்றும் நீதியரசர்கள் மேலும் தீர்ப்பளித்தனர்.
மறுசீரமைப்புக்கான பல வாய்ப்புகள் மற்றும் ஏலம் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட போதிலும், மனுதாரர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் மீண்டும் தவறிவிட்டனர் என்று கூறி, மக்கள் வங்கி இந்த விண்ணப்பத்தை எதிர்த்தது.
தீர்ப்பை வழங்கிய நீதியரசர் பிரேமச்சந்திர, ஆட்சேபிக்கப்பட்ட தீர்மானம் மார்ச் 2021-ல் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆனால் ரிட் மனு நொவம்பர் 2022-ல் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதாகவும், இது ஒரு வருடமும் மாதங்களுக்கும் மேலான தாமதம் என்றும் குறிப்பிட்டார்.
மனுதாரர்கள் இந்தத் தாமதத்திற்கு திருப்திகரமான விளக்கத்தை அளிக்கத் தவறியதோடு, தங்கள் உரிமைகளை திறம்பட புறக்கணித்துவிட்டனர் என்றும் நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.


