
ஈரானுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் சுவிஸர்லாந்து சென்றடைந்துள்ள அதேவேளை, ஈரான் தூதுக்குழுவினரும் அங்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நாளை (22) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அமெரிக்கக் குழுவைச் சந்திக்கவுள்ளதாக ஈரான் தூதுக்குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்கள், பாகிஸ்தான் மற்றும் கத்தார் மத்தியஸ்தக் குழுக்களுடன் இணைந்து சுவிட்சர்லாந்தில் பிற்பகலில் சந்திக்கும் என ஈரானின் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; “நாங்கள் ஒரு நாள் சந்திப்பை நடத்த உள்ளோம். காலையில், இந்தச் செயல்பாட்டில் மத்தியஸ்தர்களாகச் செயல்படும் பாகிஸ்தான் மற்றும் கத்தார் தூதுக்குழுக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவோம்.

பிற்பகலில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகளின் முன்னிலையில், ஈரான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் அமெரிக்காவின் தூதுக்குழுக்களுக்கு இடையே சந்திப்புகள் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸை, சுவிட்சர்லாந்தில் ஈரானிய தூதுக்குழுவின் முதல் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் சந்தித்ததாக ஐஆர்என்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
மறுபுறமாக, லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால் அந்த நீர்வழிப்பாதை அனைத்துக் கப்பல்களுக்கும் திறந்தே இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவிக்கிறது.


