தலைப்புச் செய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவு வெளியானது: முதல் தடவையாக அதிக மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில், 225,748 மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியான நிலையில், அவர் ஊடகங்களிடம் பேசும் போது இதனைக் கூறினார். இவ்வாறு பாடசாலை மாணவர்கள் 73.16% எண்ணிக்கையானோர் – உயர்தரம் கற்க தெரிவாகியுள்ளமை இதுவே முதல் முறை என்றார்.

பரீட்சை எழுதியவர்களில் 3.57% ஆக உள்ள 11,790 மாணவர்கள், ஒன்பது பாடங்களிலும் ‘A’ தரம் பெற்றுள்ளனர் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இவர்களில், 11,651 பேர் பாடசாலை மாணவர்கள், 139 பேர் வெளி பரீட்சார்த்திகள்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டிலும் மாணவர்களின் செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கணிதத்தில் சித்தி 2024-ல் 69.07% ஆக இருந்து 70.1% ஆகவும், கணிதத்தில் சித்தி 71.06% ஆக இருந்து 72.03% ஆகவும் உயர்ந்துள்ளது.

முதல் அல்லது இரண்டாவது முயற்சியில் பரீட்சையெழுதிய 7,419 பாடசாலை மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர். இது மொத்த மாணவர்களில் 2.36% ஆகும். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு பரீட்சையில் பதிவான எண்ணிக்கைக்கு நெருக்கமாக உள்ளது என்றும் பரீட்சை ஆணையர் நாயகம் தெரிவித்தார்.

பரீட்சை முடிவுகள் நேற்று (19) நள்ளிரவில் இணையத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் பரீட்சை, நாடு முழுவதும் உள்ள 3,547 மையங்களில் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்றது.

விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ஜூன் 25 முதல் ஜூலை 8, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.