
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒத்திவைப்பானது, அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிடக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை காரணமாக, போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து விவாதிக்க, ஈரான் தனது தூதுக்குழுவை அனுப்புவதைத் தாமதப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் நேற்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் அறிவிப்பு
இந்த நிலையில் நேற்றிரவு தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாகவும், அக்குழுவின் டசன் கணக்கான போராளிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் நபாத்தியே பகுதியிலும் தெற்கு லெபனானின் பிற பகுதிகளிலும் நடந்ததாகவும், ஹிஸ்புல்லாவின் போராளிகள், கட்டளை மையங்கள், ஏவுதள நிலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

தெற்கு லெபனானில் ராணுவம் தனது பணியைத் தொடரும் என்றும், பியூஃபோர்ட் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லாவின் மூலோபாய நிலத்தடி உள்கட்டமைப்பை அகற்றுவதில் கவனம் செலுத்தும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஹிஸ்புல்லாவின் இரண்டு கட்டளை மையங்கள் மீது சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


