தலைப்புச் செய்திகள்

05 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்து கொண்ட பரத நாட்டியம் நிகழ்வு: இலங்கையில் உலக சாதனை

ரதநாட்டியக் கலைஞர்கள் 05 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று கொழும்பில் ஒன்றிணைந்து, மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி வகுப்பிற்கான கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர்.

காலி முகத் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வை, இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

பாரம்பரிய நடனம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் விதமாக நடததப்பட்ட இந்த நிகழ்வில் – இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உத்தியோகபூர்வ சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த பங்கேற்பாளர்கள் -பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒத்திசைவான பரதநாட்டிய அசைவுகளை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சி மற்றும் நடுவர் தீர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சார்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா, கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அவர்; இந்தச் சாதனைக்காக உழைத்த நடனக் கலைஞர்களையும் அமைப்பாளர்களையும் வாழ்த்தியதோடு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை வலுப்படுத்துவதில் கலாச்சாரத்தின் பங்கையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர்கள் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியைக் காண பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.