தலைப்புச் செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்படவில்லை: நீதி அமைச்சர்

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை அமைப்பிலுள்ள நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு உத்தியோகபூர்வ அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார இன்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.​

நிலையாணைக் கட்டளை 27(2) இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், நீதியரசர்கள் தவிர ஏனைய தொழில் வல்லுநர்களும் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நியாயமான முறையில் பரிசீலித்து வருவதாகக் சுட்டிக்காட்டிய அவர், அவற்றில் சில கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தாலும், மற்றவை அரசியல் நோக்கங்கொண்டவை என்றும் குறிப்பிட்டார்.​

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.