தலைப்புச் செய்திகள்

ஆதம்பாவா எம்.பி ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் –

நாடாளுமன்ற உறுப்பினராக தான் இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 06 கோடி 26 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

நான் எம்.பியாக இல்லாது போனதன் பின்னர் அந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு கடலரிப்பை கட்டுப்படுத்த – இப்போதைய எம்.பிக்கள் தவறியதால் கல்முனை கரையோரம் ஆபத்தில் இருக்கிறது என, குற்றம்சாட்டினார்.

கல்முனை கடலரிப்பு விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போதே, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தொடர்ந்து பேசுகையில்;

“யார் மீதும் எனக்கு தனிப்பட்ட கோபமில்லை. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனாலும் மக்களின் பிரச்சினை தலைக்கு மேலால் போகும்போது உண்மைகளை வெளியிடாமல் மௌனமாக இருக்க முடியாது.

பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆதம்பாவா எம்.பி இருந்தும், இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல், இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்க வேண்டிய – கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் கூட, கடந்த ஒன்றரை வருடங்களாக முறையாக நடத்தாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானத்தினால் கல்முனை தொகுதியின் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடலரிப்பு தற்போது உக்கிரமடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் மீனவ அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், இதுவரை உரிய மற்றும் நிரந்தரமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கடலரிப்பு அடுத்த கட்ட பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

நான் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், இந்த பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 06 கோடி 26 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டன.

எனினும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிலரின் சதியினால் நான் தேர்தல் கேட்கவில்லை. அதன் பின்னர் வந்த எம்.பிக்களினால் இத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாத காரணத்தால், பலாஹ் பள்ளிவாசல் தொடக்கம் கடற்கரை பள்ளிவாசல் வரையிலான பகுதிகள் மீண்டும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி, மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்து வருகின்றன.

அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மரபுரிமை சொத்தான கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் அழகுக்காக நிர்மாணிக்கப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளன.

கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், இந்த அவசர பிரச்சினைக்கு தேவையான முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

குறிப்பாக, ஏற்கனவே எனது கோரிக்கைக்கு இணங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், சுமார் 250 மீற்றர் தூரத்தை பாதுகாக்கும் பணிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது தொடர்பில் – மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனது காலத்தில் மாளிகைக்காடு மையவாடிக்காக – முன்னாள் பிரதமர் மஹிந்த ஊடாகவும், சாய்ந்தமருதில் கடலரிப்பு தடுப்பு அணைகள் நிர்மாணிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் ஊடாகவும் நிதி ஒதுக்கீட்டை பெற்று, குறுகிய காலத்திற்குள் தடுப்பணை அமைக்கப்பட்டதுடன், கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பணிகளும் சில மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

ஆனால் தற்போதைய நிலையில் மிகவும் குறுகிய தூரப் பகுதியை கூட பாதுகாக்க முடியாத நிலை காணப்படுவது வேதனைக்குரியது.

கல்முனை கடலரிப்பிற்கான அடிப்படை காரணமாக ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானமே இருப்பதாக ஜனாதிபதி தொடக்கம், பல அதிகாரிகள் வரை சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, கல்முனை மக்களின் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை நோக்கி அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்முனை நகரத்தையும் அதன் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்” என்றார்