
ஒரு தனிநபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 17,117 தேவைப்படுவதாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுப் புள்ளிவிவரங்களின் படி, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, அடிப்படை மாதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகபட்ச செலவு கொழும்பு மாவட்டத்தில் ரூ. 18,461 ஆகவும், குறைந்தபட்ச செலவு மொனராகல மாவட்டத்தில் ரூ. 16,367 ஆகவும் பதிவாகியுள்ளது.
வறுமைக் கோடு என்பது ஒரு நபர் தனது அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் குறைந்தபட்ச செலவினத்தைக் குறிக்கிறது. மேலும், இது பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மாதந்தோறும் திருத்தப்படுகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, 2012/13-ஆம் ஆண்டு குடும்ப வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (NCPI) பயன்படுத்தி – விலை வேறுபாடுகளைச் சரிசெய்து, மாவட்ட உத்தியோகபூர்வ வறுமைக் கோடுகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


