
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது விற்கப்படும் ஒவ்வொரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கும் ரூ. 129 நஷ்டத்தையும், ஒவ்வொரு லீட்டர் ஒக்டேன் 92 பெட்ரோலுக்கும் ரூ. 60 நஷ்டத்தையும் எதிர்கொள்வதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.
”ஒரு லீட்டர் ஓட்டோ டீசலை விநியோகிப்பதற்கான உண்மையான செலவு சுமார் ரூ. 536 ஆகும், ஆனால் அது ரூ. 407-க்கு விற்கப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு லீட்டருக்கு ரூ. 129 நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு லீட்டர் ஒக்டேன் 92 பெட்ரோலை விநியோகிக்க ஏறக்குறைய ரூ. 494 செலவாகிறது, ஆனால் அது ரூ. 434-க்கு விற்கப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு லீட்டருக்கு ரூ. 60 நஷ்டம் ஏற்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்திலிருந்து நுகர்வோரைக் காக்கும் முயற்சியில், சமீபத்திய மாதங்களில் இந்த நஷ்டங்களில் கணிசமான பகுதியை அரசு ஏற்றுக்கொண்டு வருவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை நிர்ணயத்துக்கு உதவுவதற்காக ரூ 57 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஜூன் மாத இறுதிக்குள் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் விலைகளின் உயர்வு மற்றும் நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகியவை – எரிபொருள் விலை திருத்தத்தின் தேவைக்குக் காரணமாக அமைந்துள்ளன என்றும் ராஜகருண கூறினார்.
அதிக மானிய விலையில் எரிபொருளைத் தொடர்ந்து விற்பனை செய்வது, பொருளாதாரம் மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முடிந்தவரை எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார். அதிகப்படியான எரிபொருள் பயன்பாடு ரூபாயின் மீதான அழுத்தத்தை மோசமாக்கி, பரந்த பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.


