
– மப்றூக் –
சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்ட ரீதியானது என – ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவு இன்று (07) உத்தரவிட்டது.
2020ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தலை நடத்தாமல் விடுவது, அடிப்படை உரிமை மீறல் எனக்கூறி, 2023ஆம் ஆண்டு 07ஆம் மாதம், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் மற்றும் ஏ.ஆர்.எம். அசீம் ஆகியோர் தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பை இன்று வழங்கப்பட்டது.

இதன்போதே, சாய்ந்தமரு நகரசபை பிரகடனம் சட்டரீதியானது என நீதிமன்றம் குறிப்பிட்டதோடு, கல்முனை மாநகர சபை மற்றம் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றுக்கான எல்லை நிர்ணயங்களை இரண்டு மாதங்களுக்குள் நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதியரசர்களான ஜனக் டி.டி.சில்வா, பிரியந்த பெர்ணான்டோ மற்றும் சம்பத் அபேக்கோன் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டமையை அடுத்து, கல்முனை மாநகர சபைக்கான தேர்தலுக்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் ஞானராஜ் தலைமையிலான குழு ஆஜரானார். எதிர் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆஜரானார்.
இந்தத் தீர்ப்புக் குறித்து புதிது செய்தித்தளத்திடம் பேசிய மனுதாரர் ஏ.எல்.எம். சலீம்; ”சாய்ந்தமருது மக்களின் நீண்டகால – நியாயமான கோரிக்கைக்கு, இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளமை மகிழ்சியானது” என்றார்.
”சாய்ந்தமருது பிரதேசத்துக்கு இதுவொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்காக உழைத்த அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என, சலீம் மேலும் தெரிவித்தார்.


