
அஸ்வெசும பயனாளர்கள் ஆயிரக் கணக்கானோருக்கு ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவு இருமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது.
பணம் செலுத்தும் கோப்புகளைத் தற்செயலாக இருமுறை பதிவேற்றம் செய்ததன் காரணமாக, இந்தத் தவறு ஏற்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட மேலதிக பண்டிகைக் கொடுப்பனவுகளைச் செயல்படுத்தும் போது, பணம் செலுத்தும் “சீட்டுக் கோப்பு” இருமுறை பதிவேற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய 1.7 மில்லியன் பயனாளிக் குடும்பங்கள் இந்தப் பணம் செலுத்தும் செயல்பாட்டில் சேர்க்கப்பட்டிருந்தன. கோப்புகள் 90,000 கொண்ட தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, விநியோகத்திற்காக இலங்கை வங்கிக்கு அனுப்பப்பட்டன.
இந்த இருமுறை பதிவேற்றத்தின் விளைவாக, ‘ஏழை’ பிரிவில் உள்ள சில பயனாளிகளுக்கு, இரட்டைப் பணம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இருமுறை பணம் வழங்கப்படுவதை நிறுத்துவதற்கும், அந்தப் பணத்தை திருப்பியனுப்புமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்துவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.
இருப்பினும், இதற்கு முன்பே 49,759 பயனாளிகள் தங்களது கணக்குகளிலிருந்து மேலதிக பணத்தை எடுத்துவிட்டதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
மே மாத அஸ்வேசும கொடுப்பனவுகளிலிருந்து சுமார் ரூ. 248.7 மில்லியன் இப்போது மீட்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 500 மில்லியன் முறைகேடாக வழங்கப்பட்டிருக்கலாம் என்று சுதந்திர வழக்கறிஞர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேலதிக கொடுப்பனவுகள் வழக்கமான டிஜிட்டல் முறைக்கு வெளியே செயல்படுத்தப்பட வேண்டியிருந்ததால், ஒரு கொடுப்பனவுப் பட்டியல் “தவறுதலாக” இரண்டு முறை பதிவேற்றப்பட்டதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டாவெலகெதர தெரிவித்துள்ளார்.


