
இரண்டு வயது குழந்தையை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு தாய் மற்றும் அவரின் ஆண் நண்பரை – தர்மபுரம் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த குழந்தையை 40ஆயிரம் ரூபாய்க்கு – சந்தேக நபர்கள் விற்றுள்ளனர். இதேவேளை, குழந்தையை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணும் கைதாகியுள்ளார்.
கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை விற்கப்பட்டதாக தர்மபுரம் கிராம அலுவலர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விற்கப்பட்ட குழந்தையின் நான்கு வயது மூத்த சகோதரி தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழந்தையின் சிகிச்சைக்குப் பணம் திரட்டவே குழந்தையை விற்றதாகவும் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அந்தப் பணத்தில் இருந்து ரூ. 15,000-ஐ கைபேசி வாங்குவதற்காக தாய் பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். கைபேசி வாங்கியது குறித்து விசாரித்தபோது, சந்தேக நபர்கள் விளக்கம் அளிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 27 மற்றும் 31 வயதுடைய தாயும் அவரது நண்பரும், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். குழந்தையை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படும் பெண், கட்டுநாயக்க, அவரயவத்தவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஆவார்.
அந்த இரண்டு பெண்களும், ஆண் சந்தேக நபரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


