
யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் காணித் தகராறு ஒன்றின்போது, பெண்கள் இருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகராறு குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினருடன், மோதலில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தனக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உரிமை கோரிய ஒரு காணியை, அவர் சுத்தம் செய்ய முயன்றபோது, மற்றொரு தரப்பினரும் அந்தச் சொத்தின் மீது உரிமை கோரியதால், இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தகராறின் போது, இரண்டு பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் வெளியான வீடியோவில் நாடாளுமன்ற உறுப்பினரை கற்களால் அந்தப் பெண்கள் தாக்குகின்றனர்.
இந்த வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், தனது கைத் துப்பாக்கியைக் காட்டி நிராயுதபாணியான பெண்களை மிரட்டியதாக சாட்சிகள் தெரிவித்தனர். இதுவும் வீடியோவில் உள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றம், அந்த நிலம் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமானது என்பதை உறுதிசெய்து, கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி முன்னதாகவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் காணிக்குள் சென்றபோது, இரண்டு பெண்கள் உரிமை கோரியதால் பதற்றம் அதிகரித்தது.


