தலைப்புச் செய்திகள்

ஞானசார தேரருக்கான சிறைத் தண்டனையை அமுல்படுத்துவதற்குரிய, உத்தரவை வழங்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த உத்தரவைக் கோரி – சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு, நீதியரசர்கள் மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவருக்குப் பதிலாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, உடல்நலக்குறைவு காரணமாக தேரர் ஓய்வெடுத்து வருவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்து, அது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க மேலதிக கால அவகாசம் வழங்குமாறும் அவர் கோரினார்.

இருப்பினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இது ஒரு குற்றவியல் வழக்கு தொடர்பான விவகாரம் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றார்.

மனுவை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் கோரி ஞானசார தேரரின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, நீதிமன்றம் விசாரணையைச் சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தது.