தலைப்புச் செய்திகள்

நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் நீதவானுக்கு விளக்க மறியல்

– பாறுக் ஷிஹான் –

முன்னாள் நீதவான் ஜே.பீ ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 04ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு – களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான, பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கு இன்று (22) அழைக்கப்பட்ட போது, நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் ஆஜராகி இருந்தார்.

இதன்போது திறந்த மன்றில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் குறித்த வழக்கினை எதிர்வரும் காலங்களில் புதிய நீதவான் ஊடாக நடத்தக்கோரி, நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்று, புதிய நீதவான் ஒருவரை இவ்வழக்கில் பரிந்துரைப்பதாகவும், அவ்வாறு அப்புதிய நீதவான் முன்னிலையில் பிணைக் கோரிக்கையை விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறினார்.

மேலும், சந்தேக நபராக ஆஜர்படுத்தப்பட்ட நீதிவான் ஜே.பீ ஏ. ரஞ்சித்குமாரை விளக்கமறியலில் எதிர்வரும் மே மாதம் 4 ஆந் திகதி வரை வைக்குமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன் இவ்வழக்கில் இருந்து விலகி கொள்வதாக திறந்த நீதிமன்றத்தில் களுவாஞ்சிக்குடி நீதவான் கூறினார்.

கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவானாக செயற்பட்ட ஜே.பீ ஏ. ரஞ்சித்குமார், தனது சேவை காலத்தில் – நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த சான்றுப் பொருள்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பொதுச் சொத்துக்களை கையாடல் செய்தார் என, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளரும் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ. ரஞ்சித்குமாரை 2026.01.02 ஆந் திகதியன்று நீதிச்சேவை ஆணைக்குழு இடைநிறுத்தி ஆணைக்குழுவிற்கு இடமாற்றம் செய்திருந்தது.

அதன் பின்னர் இன்று குறித்த வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட் நிலையில், மன்றில் நீதவான் ஜே.பீ ஏ. ரஞ்சித்குமார் நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக ஆஜரானார்.

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த குறித்த நீதிவான் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் செய்துள்ளதுடன் களுவாஞ்சிக்குடி சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிவானாக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.