
அமெரிக்க யூடியூபர் ஒருவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்து, தென்கொரியா தலைநகர் சியோலிலுள்ள நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.
இவர் – கொரியப் போர்க்கால பாலியல் அடிமைகளை நினைவுகூரும் சிலையை முத்தமிடுவதை, வீடியோவாகப் பதிவுசெய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
25 வயதான ஜொனி சோமாலி, பல ஆண்டுகளுக்கு முன்பு – தென் கொரியா மற்றும் ஜப்பானில் தொடர்ச்சியான ஆபாசமான சாகசங்களைச் செய்து, அவற்றை யூடியூப் மற்றும் ட்விட்ச் போன்ற தளங்களில் நேரலையாக ஒளிபரப்பி பிரபலமடைந்தார்.
ஜொனி சோமாலியின் உண்மையான பெயர் ராம்சே காலித் இஸ்மாயில். இவருக்கு எதிராக – பொது ஒழுங்கு மீறல்கள் மற்றும் வணிகத்திற்கு இடையூறு விளைவித்ததாக 2024-ல் அவர் மீது, தென் கொரிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்தனர்.
ஒக்டோபர் 2024-ல், இரண்டாம் உலகப் போருக்கு முன்னும், போரின் போதும் ஜப்பானிய ஆக்கிரமிப்புப் படைகளால் பாலியல் அடிமைத்தனத்திற்குத் தள்ளப்பட்ட கொரியப் பெண்களை நினைவுகூரும் சிலைக்கு அருகில், முத்தமிட்டு நடனமாடும் ஒரு வீடியோவை சோமாலி பதிவேற்றினார். ஜப்பானில் இவர்கள் ‘ஆறுதல் பெண்கள்’ என்று நயமாக அழைக்கப்படுகின்றனர்.
இந்தச் சம்பவம் பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோ பின்னர் நீக்கப்பட்டது.
“அந்தச் சிலையின் முக்கியத்துவம் எனக்குத் தெரியாது” என்று கூறி, ஜொனி சோமாலி மன்னிப்புக் கோரினார்.
ஆனால், அவர் மீதான அணுகுமுறைகள் மன்னிக்க முடியாதவையாகவே இருந்தன. மேலும், கோபமடைந்த தென்கொரியர்களால் – அவர் சில சமயங்களில் துரத்தப்பட்டதாகவும், உடல்ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் அக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2023-ல், 1945-ல் அமெரிக்க அணுகுண்டுகளால் பேரழிவிற்கு உள்ளான இரண்டு நகரங்களான நாகசாகி மற்றும் ஹிரோஷிமா குறித்து சுரங்கப்பாதை பயணிகளைக் கேலி செய்தது உள்ளிட்ட நடத்தைகளால், சோமாலி அண்டை நாடான ஜப்பானில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தினார்.



