
ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் F15E விமானத்தில் பயணித்த பணியாளர்களில் இரண்டாவது நபரையும் தாங்கள் மீட்டு விட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (05) அறிவித்துள்ளார்.
நேற்று முன்னதினம் வெள்ளிக்கிழமை குறித்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்திருந்தது.
மேலும், விமானத்தில் பயணித்தவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும், ஈரான் அறிவித்தது.
இந்த நிலையில், விமாத்தில் பயணித்த விமானியொருவர் பாதுகாப்பாக பரசூட் மூலம் தப்பித்ததாக செய்திகள் வெளியாகின.
அதேவேளை, மற்றொருவரை தேடும் நடவடிக்கையில் ஈரானும், அதேவேளை அமெரிக்கப்படைகளும் ஈடுபட்டன.

இந்தப் பின்னணியிலேயே, ஈரானின் தாக்குதலுக்குள்ளான விமானத்தின் இரண்டாவது பணியாளரையும் தாங்கள் மீட்டு விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், ‘நாங்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டோம். கடந்த சில மணிநேரங்களாக, அமெரிக்க ராணுவம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
அவர் மிகவும் மதிக்கப்படும் ஒரு கேர்ணர். அவர் இப்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார். இந்த வீரமிக்க போர்வீரர், ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் எதிரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தார். ஒவ்வொரு மணி நேரமும் நெருங்கி வந்துகொண்டிருந்த நமது எதிரிகளால் அவர் வேட்டையாடப்பட்டு வந்தார். ஆனாலும், அவர் ஒருபோதும் முழுமையாகத் தனியாக இருக்கவில்லை.
ஏனெனில், அவரது தலைமைத் தளபதி, போர்ச் செயலாளர், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் மற்றும் சக போர் வீரர்கள், 24 மணி நேரமும் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, அவரை மீட்பதற்காக விடாமுயற்சியுடன் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
எனது உத்தரவின் பேரில், அமெரிக்க ராணுவம், உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட டஜன் கணக்கான விமானங்களை – அவரை மீட்க அனுப்பியது.
அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன, ஆனால் அவர் நலமாகிவிடுவார். இந்த அற்புதத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்ட மற்றொரு துணிச்சலான விமானியின் மீட்பு நடவடிக்கைக்குக் கூடுதலாக வந்துள்ளது.
எங்களின் இரண்டாவது மீட்பு நடவடிக்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக, அந்த மீட்பு நடவடிக்கையை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.
ராணுவ வரலாற்றில், எதிரிப் பிரதேசத்தின் ஆழத்தில், இரண்டு அமெரிக்க விமானிகள் தனித்தனியாக மீட்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாங்கள் ஒரு அமெரிக்கப் போர் வீரரை ஒருபோதும் கைவிட மாட்டோம். இந்த இரண்டு நடவடிக்கைகளையும், ஒரு அமெரிக்கர் கூட கொல்லப்படாமலோ அல்லது காயமடையாமலோ நம்மால் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என்பது, ஈரானிய வான்வெளியில் நாம் மிகப்பெரிய வான் ஆதிக்கத்தையும் மேன்மையையும் அடைந்துவிட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
உலகின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த, மிகவும் தொழில்முறை வாய்ந்த மற்றும் கொடிய ராணுவத்தை நாம் கொண்டுள்ளோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.


