
தங்கள் செயல்பாடுகளைப் பாதிக்கும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளைக் காரணம் காட்டி, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9.30 மணிக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்பாக அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளனர் என – பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறையின் கீழ் எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களே – இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று, செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா கூறியுள்ளார்.
இந்த முறை, இத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள எரிபொருள் விலை சூத்திரத்தின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பிற நிறுவனங்கள் 6% செயல்பாட்டு லாபத்தைப் பெறுகின்றன,
அதேசமயம் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னர் 3% லாபப் பங்கும் வழங்கப்பட்டது என்றும் சாந்த சில்வா மேலும் விளக்கினார்.
இருப்பினும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தால் இந்த லாபப் பங்குத் தொகை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகத்தில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தோல்விகள் காரணமாக, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் திறமையாகச் செயல்பட சிரமப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து நிலவிவரும் இந்தப் பிரச்சினைகள், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலையங்களின் செயல்பாடுகளின் நிலைத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கின்றன என்று அந்தச் சங்கம் தெரிவிக்கிறது.



