
உள்ளகப் பயிற்சியை முடித்த வைத்தியர்களுக்கான நியமன முறை தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தொடங்கியுள்ள வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்க – எந்த அடிப்படையும் இல்லை என, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து இன்று (04) கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த வேலைநிறுத்தம் நியாயமான கவலைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும், எனவே இது பேச்சுவார்த்தைக்குத் தகுதியற்றது எனவும் கூறினார்.

நியமன முறையில் சிக்கல்கள் இருந்தால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக, நீதிமன்றங்கள் மூலம் சட்டரீதியான தீர்வை, அரச வைத்திய வைத்திய அதிகாரிகள் சங்கம் கோர வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று விமர்சித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இதுபோன்ற நடவடிக்கைகள் தகராறுகளைத் தீர்ப்பதற்கான பொருத்தமான வழிமுறை அல்ல என்றும் தெரிவித்தார்.


