
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த விண்ணப்பதாரர்களில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளனர் எனத் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று (31) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டன.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான (www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk) ஆகியவற்றில் உள்நுழைந்த பிறகு, சரியான சுட்டிலகத்தை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம் என்று திணைக்களம் கூறியுள்ளது.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 221,413 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 60,397 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றினர்.

146,405 பாடசாலை விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும், அதே நேரத்தில் 30,122 தனியார் விண்ணப்பதாரர்கள் அரச பல்கலைக்கழகங்களில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மொத்த விண்ணப்பதாரர்களில் 62.64 சதவீதமான, அதாவது 1,76,527 விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், பரீட்சைக்குத் தோற்றிய 111 விண்ணப்பதாரர்களின் பரீட்சை முடிவுகள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று திணைக்களம் மேலும் தெரிவித்தது.


