தலைப்புச் செய்திகள்

170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தில் அகழ்வு நடவடிக்கை இரண்டாம் நாளாக தொடர்கிறது

– நூருல் ஹுதா உமர் –

ட்டக்களப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில், நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் இன்று (31) தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி, பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு கல்முனை வழியாக – காத்தான்குடியை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட 170 பேரை, குருக்கள்மடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) கடத்தி படுகொலை செய்து புதைத்ததாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம்ட களுவாஞ்சிக்குடி நீதிவானின் நேரடி மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பித்தன. அதிகாரிகள் இந்த புதைகுழியில் அடையாளங்கள் மற்றும் சாட்சியங்களை சேகரித்து, விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இச்சம்பவம், 1990ஆம் ஆண்டு நடந்த கொலையின் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளிப்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. சட்டத்தரணிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர் அகழ்வுப் பணி நடக்கும் இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.

அகழ்வுப் பணிகள் நீதிமன்ற மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.