
ஈரான் மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்க படைகள் தயார் நிலையில் உள்ளதாக நாட்டின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருப்பது மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை பல வாரங்கள் வரை நீடிக்கலாம் என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டஸ் தெரிவித்துள்ளது.
ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்வது சிறந்ததாக இருக்கும் என – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட், மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே யூஎஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல், அரேபிய கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவதாக ஒரு போர்க்கப்பலை அனுப்பி இருப்பது பிராந்தியத்தில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்து, ஜனாதிபதி ட்ரம்ப்-க்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அதன்படி, ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்த உடனே, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபுஅமீரகம், சஊதி அரேபியா என மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ராணுவ தளங்கள் உள்ளன.
ஈரான் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், அமெரிக்காவுக்கு தனது சக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் பதிலடி கொடுக்க, மேற்படி நாடு களில் உள்ள ராணுவ தளங்களையே குறிவைக்கும் என்பதால், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் மிக மோசமானதாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


