தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனையில் இரண்டு இறைச்சிக் கடைகளின் விற்பனை அனுமதிகள் ரத்து: பிரதேச சபை செயலாளர் அதிரடி நடவடிக்கை

வயிற்றினுள் கன்றுகளைக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை அறுத்து, அதன் இறைச்சிகளை விற்பனை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இறைச்சிக் கடைகளின் அனுமதியை, அட்டாளைச்சேனை பிரதேச சபை நேற்று (12) ரத்துச் செய்துள்ளது.

குறித்த மாடுகளை அறுக்க வேண்டாம் என, வைத்தியர் அறிவுறுத்திய பின்னரும், மேற்படி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குரிய விலங்கு அறுக்கும் இடத்தில் (மடுவம்) மேற்படி மாடுகள் இரண்டையும் அறுத்ததாக பிரதேச சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்ப்பம் தரித்திருந்த மேற்படி மாடுகளை அறுத்து – அதன் வயிற்றிலிருந்த கன்றுகளை வெளியில் எடுத்து வீசி விட்டு, தாய் மாடுகளின் இறைச்சிகளை – கடை உரிமையாளர்கள் விற்பனை செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

இதனையடுத்தே, குறித்த உரிமையாளர்களுக்குச் சொந்தமான விற்பனை அனுமதியை, பிரதேச சபை நேற்று ரத்துச் செய்தது.

மேலும், கடை உரிமையாளர்கள் இருவருக்கும் எதிராக – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஜி. முபாறக் நேற்று முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.