தலைப்புச் செய்திகள்

05 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸார் கைது

மோட்டார் பைக் சாரதியிடமிருந்து 05 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் தியபெதும பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கொன்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகிய இருவரை – நேற்று (11) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் மேற்படி நபர்கள் இருவரும் கைதாகினர்.

கடந்த 09 ஆம் திகதி முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பரிசோதித்த பொலிஸார், அவர் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வருவாய் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதையும், அவர் மது அருந்தி வாகனம் ஓட்டுவதையும் கண்டறிந்தனர்.

இதனையடுத்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள் காப்புறுதிப் பத்திரம் மற்றும் காலாவதியான வருவாய் உரிமைப் பத்திரம் ஆகிவற்றை பொலிஸார் தக்க வைத்துக் கொண்டு, ஆவணங்களைத் திருப்பித் தருவதற்காக, 05 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று காலை 11.30 மணியளவில் தியபெதும வாராந்த சந்தை எதிரே உள்ள பிரதான சாலையில் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.