தலைப்புச் செய்திகள்

இலங்கைக்கு இந்தியா மேலும் பல கோடி ரூபாய் நிதியுதவி: ஒப்பந்தம் கைச்சாத்தானது

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கும், அந்த பிரிவுக்கு வைத்திய உபகரணங்களை வழங்குவதற்கும், இந்திய அரசு 600 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று (09) இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கையெழுத்திடும் வைபவத்தில் – சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் கலந்து கொண்டார்.

வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டு மாடி நிர்மாணத்தையும், அந்த அலகுக்குத் தேவையான அனைத்து வைத்திய உபகரணங்களையும் கொள்முதல் செய்வதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது அங்குள்ள வைத்திய வசதிகளை மேம்படுத்தும் என்றும், சராசரியாக தினசரி உள்ளக நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் கிடைக்கக்கூடிய படுக்கைகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள சுவ செரிய ‘1990’ ஆம்பியுலன்ஸ் சேவை; கோவிட்-19 தொற்றுநோய்களின் போது வழங்கப்பட்ட வைத்திய உதவி; டிக்கோயாவில் 150 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு வைத்தியசாலையின் கட்டுமானம்; கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளை மேம்படுத்துதல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு புதிய அறுவை சிகிச்சை பிரிவை நிர்மாணித்தல் என்பவற்றுக்காகவும் இந்தியா உதவியளித்துள்ளது.

மேலும், சுவ செரிய ‘1990’ ஆம்பியுலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கும், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நான்கு மாடி நோயாளர் விடுதி வளாகத்தை நிர்மாணிப்பதற்கும் – இந்தியா மானிய உதவி வழங்குவதற்கான பரிசீலனையில் உள்ளது.