
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான வாக்கொடுப்பை பிற்பகல் 3.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்களுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புக்கொண்டதாக, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்துச் செய்யும் சட்டமூலம் மீதான விவாதத்தில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்படி சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் 06 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஆயினும், அரசியலமைப்புடன் குறித்த சட்டமூலம் எவ்வகையிலும் முரண்படவில்லை என்று, உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருந்தது.



