
ஜூலை 17, 2022 அன்று, அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அப்போது நடந்த மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் – நாடு முழுவதும் அவசரகால நிலைமையை அமுல்படுத்தியமை, அடிப்படை உரிமைகளை மீறிய செயற்பாடு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வில், இரண்டு பேரின் ஆதரவுடன் மேற்படி தீர்ப்பு இன்று (23) வழங்கப்பட்டது.
பொது பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமையானது, தன்னிச்சையானது என்றும் சட்டபூர்வ அதிகாரம் இல்லாதது எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.
பிரதம நீதியரசர் முர்து பெனாண்டோ மற்றும் நீதியரசர் யசந்த கோடகொட ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர தனது கருத்தை வெளியிட்டு, அவசரகால நிலைமையை அமுல்படுத்தியமை – அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்று கூறினார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், அம்பிகா சற்குணநாதன், சட்டத்தரணி ஆதம் லெப்பே ஆசாத், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆனையாளர் லக்ஷ்மணன் சஞ்சீவ் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகிய தரப்புக்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
மனுதாரர்களுக்கான சட்டச் செலவுகளை அரசு செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


