தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் சாரதி தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதி

– மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர்- தாக்குதலுக்குள்ளான நிலையில், இன்று (15) அதிகாலை ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுதீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் – தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர், ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் மூவர், விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டொக்டர் அலாவுதீன் கூறினார்.

இதேவேளை, ஒலுவில் வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மூன்று மாணவர்களும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தின் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, கடந்த ஜுன் மாதம் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 சிரேஷ்ட மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியிலேயே, பொறியியல் பீடத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது, மீண்டும் அதே பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் இன்று (15) அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக, அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளரின் தொலைபேசிக்கு ‘புதிது’ செய்தித்தளம் அழைப்பை ஏற்படுத்தியபோதும், பதிவாளரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

தொடர்பான செய்தி: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை; வீடியோ வெளியாகி சர்ச்சை: சம்பவம் குறித்து பதிவாளர் விளக்கம்