தலைப்புச் செய்திகள்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 09 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஹைல் பிணையில் விடுவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் எனக்கூறி கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த 21 வயது விமானப் போக்குவரத்து கற்கை மாணவர் முகமது சுஹைல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கல்கிசை நீதவான் நீதிமன்றில் இவர் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவை நீதவான் வழங்கினார்.

முகமது சுஹைலை பிணையில் விடுவிக்குமாறு கோரும் – சட்டமா அதிபரின் பரிந்துரையை, இதன்போது தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுராத ஹேர்த் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

இதைக் கருத்தில் கொண்டு, முகமது சுஹைலை பிஒணயில் விடுவிக்குமாறு கல்கிசை நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கீத்மா பெனாண்டோ, சட்டத்தரணிகள் இல்ஹாம் ஹசனலி, அஷ்ரப் முக்தார் மற்றும் பெஹ்ஷாத் ஆகியோர் சுஹைல் சார்பில் ஆஜரானார்கள்.

மாவனெல்லாவைச் சேர்ந்த முகமது சுஹைல், 2024 ஒக்டோபர் மாதம் தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாததற்காக கைது செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றத்தால் அதைக் காட்டிய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். ஆயினும் அதன் பிறகு, இஸ்ரேலிய தேசியக் கொடியை காலால் மிதிக்கும் இன்ஸ்டாகிராம் பதிவின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், சுஹைலுக்கு எதிராக “எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என்பதால் பிணை வழங்குவதில் “எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று, தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடந்த வாரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

21 வயது சுஹைல் ஒன்பது மாதங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.