
தாதியர் வெற்றிடங்களை நியமிப்பதற்கு வசதியாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படுமென, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (15) பேசிய அமைச்சர்; 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய 2,650 மாணவர்களையும், தாதி பட்டப்படிப்பை முடித்த 850 நபர்களையும் தாதியர்களாக ஆட்சேர்ப்பு செய்து பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“தற்போது தாதியர் பற்றாக்குறையை நாங்கள் எதிர்கொள்கிறோம். வடக்கு மாகாணத்தில் மட்டும், ஒரு தாதி கூட இல்லாத 33 கிராமப்புற வைத்தியசாலைகள் உள்ளன” என்றும் அமைச்சர் கூறினார்.
“இதை நிவர்த்தி செய்யும் வகையில், 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்குத் தோற்றி சித்தியடைந்த 2,650 பேர், தாதியர்களாக பணிக்கு அமர்த்தப்படும் வர்த்தமானி அறிவிப்பை ஜூலை 18 அன்று வெளியிடுவோம். இந்த நபர்கள் தாதி பயிற்சி திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
“முன்னர் செவிலியர் பட்டங்களைப் பெற்ற 850 பட்டதாரிகளை பொது சேவையில் சேர்ப்போம். இதற்காக ஒரே நாளில் தனி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும்” என்றும் விபரித்தார்.



