தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளராக, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உவைஸ் தெரிவு: தேசிய காங்கிரஸுக்கு உப தவிசாளர்

தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்

– பாறுக் ஷிஹான் –

அட்டாளைச்சேனை  பிரதேச சபையின் புதிய தவிசாளராக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியை  சேர்ந்த உறுப்பினர்   ஏ.எஸ்.எம். உவைஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

உப தவிசாளராக தேசிய காங்கிரஸ்   கட்சி உறுப்பினர் முகம்மட் பாறூக் நஜீத் தெரிவானார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத்  தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி   தலைமையில்  சபை மண்டபத்தில் இன்று (2) மாலை நடைபெற்றது.

18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 08 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 04 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும், தேசிய காங்கிரஸ் 02 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தவிசாளர் தெரிவில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏ.எஸ்.எம். உவைஸ் களமிறக்கப்பட்டார். மறுபுறம் தேசிய மக்கள் சக்தி சார்பில் சாஹீர் பாஹிமா என்பவர் போட்டியிட்டார்.

இதனையடுத்து நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் உவைஸ் 11 வாக்குகளையும், பாஹிமா 03 வாக்குகளையும் பெற்றனர்.

அதற்கிணங்க, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக உவைஸ் தெரிவானார்.

இதன் பின்னர் உப தவிசாளர் பதவிக்கு – தேசிய காங்கிரஸை சேர்ந்த பாறூக் நஜீத் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.

மேற்படி இரண்டு வாக்கெடுப்புகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களும் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.

பாறூக் நஜீத் – உப தவிசாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர், முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில்
புதிய உறுப்பினர்கள்
பார்வையாளர்கள்