தலைப்புச் செய்திகள்

80 ரூபாய் உப்பை, 250 ரூபாய்க்கு விற்க வேண்டாம்; இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை

இறக்குமதி செய்யப்பட்ட உப்பை அதிக விலைக்கு விற்பதற்கு இறக்கமதியாளர்கள் முயற்சித்தால், இந்த வாரத்திற்குள் அரசாங்கம் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.

உள்ளூர் சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக – உப்பு இறக்குமதியை அரசாங்கம் அனுமதித்ததாகவும், இறக்குமதியாளர்கள் லாபத்தை அடிப்படையாகக் கொண்ட அதிக விலைக்கு உப்பை விற்பதற்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பு அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 40% வரியுடன் சேர்த்து 77 ரூபாய் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

“அதன் விலை ஒரு கிலோவுக்கு 80 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். பின்னர், மொத்த வியாபாரிகள் 10, 20 அல்லது 30 ரூபாய் லாபத்தை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த வரம்பைத் தாண்ட அனுமதியில்லை. இருப்பினும், இறக்குமதியாளர்கள் தற்போதைய பற்றாக்குறையைப் பயன்படுத்தி, ஒரு மோசடியை உருவாக்க முயற்சித்தால், அத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று நான் அவர்களை எச்சரிக்கிறேன். இது தொடர்ந்தால் அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்”என்று அவர் கூறினார்.

இறக்குமதியாளர்கள் 80 ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பை 250 ரூபாய்க்கு விற்க முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் சமரசிங்க கேட்டுக் கொண்டார்.

“இறக்குமதி செய்யப்பட்ட உப்பு 110 அல்லது 120 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் பரவாயில்லை. அந்த லாபம் போதுமானது. உப்பு இறக்குமதி தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதே தவிர, இறக்குமதியாளர்கள் லாபம் ஈட்டுவதற்காக அல்ல. இறக்குமதியாளர்களுக்கு இதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அத்தகைய லாபம் பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.