தலைப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொருட்டு சாணக்கியன் எம்.பி சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம்: முதல் வாசிப்பு இன்று இடம்பெற்றது

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்ட மூலம் தொடர்பான முதல் வாசிப்பு, இன்றைய தினம் (05) இடம் பெற்றது.

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைச் சுற்றியுள்ள நீண்டகால சர்ச்சையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, மேற்படி தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட நிலைமை மற்றும் திருத்தம் தொடர்பில் மேற்கொண்டு ஆராயப்படுவதும், மாகாண சபை தேர்தல்களைத் தாமதிக்க பயன்படுத்தப்படும் குழப்பத்தையும் நீக்குவதும், தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடனடியாக தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரமளிப்பதும் இந்த சட்டமூலத்தின் நோக்கங்களாகும்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என்பது – இன்றளவிலும் கேள்விக்குறியாக உள்ளது.

மாகாண சபைகள் 1987ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் நிறுவப்பட்டன. இது அதிகாரத்தை மத்தியிலிருந்து பிராந்தியங்களுக்கு மாற்றும் நோக்குடன், குறிப்பாக இன மோதல்களை எதிர்கொள்ளும் சூழலில், பிராந்திய நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் இயங்குகிறது.

தற்போதைய சட்டப்படி, மாகாண சபை தேர்தல்கள் 1988ஆம் ஆண்டு Provincial Councils Election Act No. 2ன் கீழ் நடைபெற வேண்டும். இவை ஐந்து ஆண்டுகள் காலத்திற்கான தேர்தல்களாக இருக்க வேண்டும். எனினும், 2017இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு பிறகு, இலங்கையில் எந்தவொரு மாகாண சபை தேர்தல்களும் நடத்தப்படவில்லை.

‘1988 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான மனு’ என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் இந்தப் பிரேரணையை வழிமொழிந்துள்ளார்.