தலைப்புச் செய்திகள்

பிரான்ஸிலிருந்து குத்தகைக்கு எடுத்த விமானத்துக்கு, மாதாந்தம் 275000 டொலர் செலுத்த வேண்டும்: அமைச்சர் பிமல் தெரிவிப்பு

பிரான்சிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குத்தகைக்கு எடுத்த புதிய விமானத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் – மாதந்தோறும் 275,000 அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 08 கோடி 22 லட்சத்து 62500 ரூபாய்) கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (05) தெரிவித்தார்.

விமானம் மூலம் கிடைக்கும் வருவாயுடன் ஒப்பிடும்போது, இது பெரிய தொகை அல்ல என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

ராஜபக்ச ஆட்சியின் போது நடந்த விமான ஒப்பந்தத்தின் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்னும் மாதந்தோறும் 800,000 அமெரிக்க டொலர்களை செலுத்துகிறது என்றும், அதே நேரத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எந்த விமாமனத்தையும் பெறவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் ராஜபக்ச அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்ததாகவும், மறுபுறம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் – ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் மோசடி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்