தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் பெயர்களை 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டாய பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளின் பெயர்களை இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அவசர நினைவூட்டலை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சிச் தேர்தல்கள் மூன்று வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த போதிலும், பல கட்சிகள் மற்றும் குழுக்கள் அந்தந்த சபைகளுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் முழு பட்டியலையும் இன்னும் பரிந்துரைக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு – பெப்ரவரி 17, அன்று வெளியிட்ட 2424/02 என்ற வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 02ஆம் திகதி நிறுவனங்களின் புதிய பதவிக்காலம் தொடங்குகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் இறுதிப் பட்டியல் புதிய பதவிக்காலம் தொடங்குவதற்கு முன்பு – வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என்று ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எனவே, வர்த்தமானி வெளியீடு செயல்முறை தாமதமாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அமுல்படுத்தப்படுகிறது என்றும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த உத்தரவு இன்றைய தினம் மே 27, 2025 திகதியிட்ட விசேட வர்த்தமானி எண். 2438/13இல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.