தலைப்புச் செய்திகள்

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி செய்னப் கௌரவிக்கப்பட்டார்

சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி எம்.எஃப். செய்னப், நேற்றைய தினம் (26) பல்கலைக்கழக கலை கலாசார பீட சமூகத்தினால் வரவேற்று, கௌரவிக்கப்பட்டார்.

குறித்த மாணவி – கலை மற்றும் கலாசார பீட புவியியல் துறையில் மூன்றாம் ஆண்டு, விஷேட தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

பல்கலைக்கழக கேட்போர் அரங்கில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்,
பிரதம அதிதியாக பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கலந்து கொண்டு குறித்த மாணவியை பாராட்டி உரையாற்றியதுடன் கௌரவத்தையும் வழங்கினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மர்ஹூம் ஏ.ஆர்.எம். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற 3ஆது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு இவர் வெற்றிகளைப் பெற்றிருந்தார்.

மாணவி செய்னப், சிரேஷ்ட கட்டா (Senior Kata Female Level 1) பிரிவில் முதல் இடத்தையும், சிரேஷ்ட குமிதே (Senior Kumite Female) பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றிருந்தார்.

நிகழ்வின்போது பீடத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், சிரேஷ்ட, கனிஷ்ட விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

செய்னப் பெற்றுள்ள இந்த வெற்றிகள் – பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் ஊக்கமும் உந்தலும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.