தலைப்புச் செய்திகள்

கல்முனை, எல்பிட்டிய தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல்

நாடு முழுவதிலுமுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு நாளை (06) காலை 7.00 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் 339 சபைகளுக்கு நாளை தேர்தல் வாக்களிப்டபு நடைபெறுகிறது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதேவேளை, கல்முனை மாநகர சபைத் தொடர்பில் நடந்து வரும் வழக்கு காரணமாக, அந்த சபைக்கு நாளை தேர்தல் நடைபெறாது.

நாடு முழுவதும் நாளைய தேர்தலில் 01 கோடியே 71 லட்சத்து 56,338 பேர் – வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கலப்பு முறையின் கீழ் – தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், 60% உறுப்பினர்கள் வட்டார முறை மூலமாகவும், 40% உறுப்பினர்கள் விகிதாசார முறையின் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்தல்கள் நாடு முழுவதும் 13,759 மையங்களில் நடைபெறும், தேர்தலுக்கான இறுதி ஏற்பாடுகள் இன்று (05) காலை முதல் நடந்து வருகின்றன. நாடு முழுவதும் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லும் பணி இன்று காலை தொடங்கியது.

இதற்கிடையில், தேர்தல் கண்காணிப்பில், பஃப்ரல் எனப்படும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு – சுமார் 3,000 பார்வையாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் செயல்முறையை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பஃப்ரலின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வாக்களிக்கும் வசதியை உறுதி செய்வதற்காக, அனைத்து தனியார் மற்றும் அரச நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு மணிநேரத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

வாக்களிக்கும் நிலையத்திற்கான தூரத்தின் அடிப்படையில் – தனியார் துறை ஊழியர்களுக்கான விடுப்பு உரிமையை கோடிட்டுக் காட்டும் ஒரு சுற்றறிக்கையை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது:

  • 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரங்களுக்கு: அரை நாள் விடுப்பு
  • 40 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான தூரங்களுக்கு: ஒரு நாள் விடுப்பு
  • 100 முதல் 150 கிலோமீட்டர் வரையிலான தூரங்களுக்கு: ஒன்றரை நாட்கள்
  • 150 கிலோமீட்டருக்கு மேல் உள்ள தூரங்களுக்கு: இரண்டு நாட்கள்