
அரச கட்டடங்களுக்கு பசுக்களின் சாணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயற்கை வர்ணப்பூச்சுக்களைப் பயன்படுத்த வேண்டும் என்று – இந்தியாவின் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரச அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.
அரச அதிகாரிகளுடன் நேற்று (04) ஆலோசனைக் கூட்டம் நடத்திய யோகி ஆதித்யநாத்திடம் – கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையின் செயல்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அதனை மதிப்பாய்வு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத், பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கு – உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத்; “உத்தரபிரதேசத்தின் கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய தூணாக கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாடு அமைந்துள்ளது. வாழ்வாதாரம், ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான வழிகளாக இவை அமைந்துள்ளன.
பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரச கட்டிடங்களில் பசு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வர்ணப்பூச்சு பயன்படுத்தப்பட வேண்டும். அதோடு அதன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.



