
ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் அவளது அந்தரங்க உறுப்புகளை வெட்டி கொடூரமாக கொடுமைப்படுத்திய நபரொருவருக்கு – குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய 51 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
உடலுழைப்புத் தொழிலாளியாக – நிலையான தங்குமிடம் இல்லாமல் அலைந்து திரிந்து வாழ்ந்த குற்றவாளி எதிரிசிங்க ஆராச்சிகே சந்தன எதிரிசிங்க (வயது 39) எனும் மேற்படி குற்றவாளி, நிமல் மற்றும் சாந்த என்ற புனைப்பெயர்களால் அறியப்பட்டவர்.
அவர் 2018 ஆம் ஆண்டு வெல்பல்ல பகுதியில் – ஒன்பது வயது சிறுமியை கைவிடப்பட்ட தென்னந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்று – பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் அந்தப் பிள்ளையின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி கொடூரமான காயங்களை ஏற்படுத்தியதோடு, அந்தச் சிறுமியின் பற்களையும் உடைத்துள்ளார்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை உயிருடன் புதைத்து கொலை செய்தமைக்காக, புத்தளம் மேல் நீதிமன்றத்தால் இந்தக் குற்றவாளிக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொலை வழக்கில் தீர்ப்பு வரும் வரை பிணையில் வந்தபோதே, அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருந்தார்.
இவருக்கு எதிராக மேற்படி சம்பவம் தொடர்பில் 06 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான தீர்பில், அவருக்கு 20500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஒவ்வொரு குற்றச்சாட்டுகளின் கீழும் சிறைத்தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கும் வகையில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது,
தண்டனையை வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை- நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாகக் தெரிவித்தார்.
பன்னால காவல்துறையின் உதவியுடன் அரசு வழக்கறிஞர் மஹிந்த சில்வா வழக்கு தொடர்ந்தார், அதே நேரத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அமல் ரணசிங்க மற்றும் நந்திகா அமரசிங்க ஆகியோர் வழக்கறிஞர் இல்லாத குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானார்கள்.



