
லைக்கா குழுமம்11க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமங்களைப் பெற்றுக் கொண்டமையினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சமூக ஆர்வலர் ஜமுனி கமந்த துஷார தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று (27) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
லைக்கா குழுமம் 11க்கும் மேற்பட்ட ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமங்களைப் பெற்றுக் கொள்வதில் – இலங்கையின் சட்டத்தை மீறியுள்ளதாகவும், இதில் முன்னர்ஈஏபி ( EAP) குழுமத்துக்குச் சொந்தமான உரிமங்களும் அடங்கும் என்றும், இது கடுமையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் அபேயகோன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கியது.
மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி உதித எகலஹேவா மற்றும் சட்டத்தரணி என்.கே. அசோக்பரன் ஆகியோர் ஆஜரானார்கள்.
முன்னாள் சட்டமா அதிபர் (ஓய்வுபெற்ற) சஞ்சய் ராஜரத்தினம், ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெனாண்டோ, ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜெயசுந்தர, மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் பிரதிவாதிகள் சார்பாக ஆஜரானார்கள்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன ஆகியோர் அரசு தரப்பு சார்பாக ஆஜரானார்கள்.
இந்த மனு டிசம்பர் 2, 2025 அன்று வாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.



