தலைப்புச் செய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு உதவிய பொலிஸ் கொன்ஸ்டபில் உள்ளிட்ட இருவர் கைது

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமைறைவாகியிருந்த காலப்பகுதியில் – அவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 27 முதல் மார்ச் 19 வரை தேசபந்து தென்னகோனுக்கு உதவியதாக விசேட பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரும், தலவத்துகொடையைச் சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு வெலிகம – பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கிட்டத்தட்ட 20 நாட்கள் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கும் வகையில் தலைமறைவாகியிருந்தார். அதன் பின்னர் மார்ச் 19 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து, அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் அவர் தற்போது கண்டியில் உள்ள தும்பர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை, வெலிகம – பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக, மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்திருந்தது.