
உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 29ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்குமாறு உத்தரவிட்ட 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்காமல், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்கான காரணத்தைக் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (11) அறிவித்துள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை ரத்து செய்ததன் அடிப்படையில், குறித்த இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஒரு மாதத்திற்குள் 01 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று, கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு இன்று (11) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மைத்திரிபால சிறிசேன இன்னும் குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை செலுத்தவில்லை என்று மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதன்படி, மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜராகி – இழப்பீட்டுத் தொகையை செலுத்தத் தவறியமைக்கான காரணத்தைக் காட்ட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.



