தலைப்புச் செய்திகள்

பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க, அமைச்சரவை அனுமதி

ட்டலந்தா ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (11) நடைபெற்ற போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும், அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவும் பல கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – கடந்த வியாழக்கிழமை (6) அல் ஜசீராவின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டதையடுத்து, 1988 மற்றம் 1990 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை விசாரிக்கும் பட்டலந்த அறிக்கை பற்றிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, 1988/90 காலகட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்களுக்கு – நீதியைப் பெற்றுத் தருவதாக அவரின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் குறித்த சம்பவங்களை விசாரிப்பதற்காக செப்டம்பர் 21, 1995 அன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்தார்.

படலந்த ஆணைக்குழு என்று அழைக்கப்படும் இந்த ஆணைக்கு, அரச உர உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் இருந்த பட்டலந்த வீட்டு வசதித் திட்டத்தில் தனிநபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, சித்திரவதை செய்யப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை மற்றும் காணாமல் போனமை ஆகியவற்றை ஆராயும் பணியை மேற்கொண்டது.

பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண்பதும், தேவையான பரிந்துரைகளை வழங்குவதும் இதன் பணியாகும்.

இந்த ஆணைக்குழுவுக்கு அப்போதைய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. ஜெயவிக்ரம தலைமை தாங்கினார், மேல் நீதிமன்ற நீதிபதி என்.இ. திசாநாயக்க உறுப்பினராகப் பணியாற்றினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது. மேலும் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட ஆதரவை வழங்கியது. ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியங்களை வழிநடத்தியது.

தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி யசந்த கோடகொட மற்றும் தற்போதைய ஜனாதிபதி சட்டதரணி சரத் ஜெயமன்ன போன்ற – குறிப்பிடத்தக்க நபர்கள் இந்த சட்டக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் 12 தனித்தனி சந்தர்ப்பங்களில் நீட்டிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சாட்சியங்களைச் சேகரித்த பிறகு, ஆணைக்குழு தனது அறிக்கையை மார்ச் 26, 1998 அன்று ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் சமர்ப்பித்தது.

படலந்த அறிக்கைக்கு என்ன நடந்தது?

அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம், பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அறிக்கையின் பரிந்துரைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.

பட்டலந்த வதை முகாம், ரணில் விக்ரமசிங்கவின் வழிநடத்தலில் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.