
நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை, கடுகண்ணாவ பொலிஸார் – இன்று (03) காலை கைது செய்தனர்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற குறித்த நபரை – பெரும் முயற்சிக்குப் பிறகு தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நபர், கண்டி-கொழும்பு வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அவரைப் பிடிக்க பொலிஸார் முயன்ற போது, அவர் ஆரம்பத்தில் பிடிபடாமல் தப்பிச் சென்றுள்ளார்.
கேகாலை மற்றும் மாவனல்லை பொலிஸாரும் அந்த நபரைத் துரத்திச் சென்ற நிலையில், அவர்களிடம் அந்த நபர் பிடிபடாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து கடுகண்ணாவ மற்றும் பேராதனை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கடுகண்ணாவ பொலிஸார் – வீதித் தடைகளை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அஹங்கமவைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் தொடர்பான மனநல பரிசோதனையைப் பெற்றுக் கொள்வதற்குரிய அனுமதியை பொலிஸார் நீதிமன்றில் கோரவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.



