
அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் – போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்கள் உள்ளதாகவும், இது தொடர்பில் அவசரமாகத் தலையிட வேண்டும் எனவும் நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.
அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் தொடக்கக் கூட்டத்தின் போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளாகாமல் தடுக்க, பாடசாலை மட்டத்தில் மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவதன் அவசியத்தை இந்த விடயம் எடுத்துக்காட்டியுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்களைப் போன்ற ஒரு சமூகப் பாதுகாப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்துதல், மாதிரி சமூக அதிகாரமளித்தல், ‘ஸ்மார்ட் கிராமங்கள்’ திட்டத்தை செயல்படுத்துதல், கிராமப்புற நுண்நிதி கடன்களின் சவால்களை நிவர்த்தி செய்தல், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கவலைகளைச் சமாளித்தல் ஆகியவற்றிலும் இதன்போது – அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியது.



